காணாமல் போன விருட்சங்கள்! விருட்சங்கள் யாவும் பிரம்மத்தின் வடிவம்!
‘திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்’ என்பார் அப்பர் ஸ்வாமிகள். அதாவது திருக்கோயில் இல்லாத ஊர் செல்வம் இல்லாத ஊர் என்கிறார். இதையே எளிமையாக கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றார்கள் பெரியோர்கள். அப்படி என்ன கோயிலுக்கு விசேஷம் என்கிறீர்களா? அந்த காலத்தில் ஒவ்வொரு கோயிலும் அந்த ஊரின் மருத்துவமனையாக விளங்கி வந்துள்ளது. ஊர் மக்களின் நோயைத் தீர்க்கும் மருத்துவமனையான கோயில் இல்லாத ஊரில் குடியிருப்பது ஆபத்து தானே?
அதெப்படி கோயில் மருத்துவமனையாக இருந்து வந்திருக்க முடியும்? ஒவ்வொரு கோயிலிலும் இருந்த நந்தவனங்கள் அருமையான மூலிகைங்களை கொண்டிருந்தது. இவையே மக்களின் நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்கியது. மேலும் ஒரு ஊர் உருவாகுமுன்னர் வனமாகத் தான் இருந்திருக்கும். வனம் அழிக்கப்பட்டு ஊராக உருவான பின்னர், அந்த மரத்தின் அடையாளமாக அவை திருக்கோயிலின் தல விருட்சமாக வைக்கப்பட்டது. அந்த அரியவகை மரங்கள் அழிந்து விடக்கூடாது என்பதாலேயே இப்படி கோயிலில் வளர்க்கப்பட்டது. சகல நோய்களும் தீர்த்து வந்த அந்த தல விருட்சங்கள் பல இன்று இருக்கின்றனவா என்றால், இந்த கேள்விக்கு பதில் ‘இல்லை’ என்ற சோகத்தைத்தான் அளிக்கிறது. பல ஆலயங்களில் தல விருட்சமே மாறிப்போயுள்ளது என்பதும் வேதனையான விஷயம். கோயில் என்றால் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம், கீர்த்தி ஆகிய ஐந்தும் விசேஷமாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் தீர்த்தங்களை ஆக்கிரமிப்பால் இழந்தோம். இப்போது அலட்சியத்தால் விருட்சங்களை இழந்து வருகிறோம்.
நமது நாட்டின் பெயரே நாவலந்தீவு தான். இதையே வடமொழியில் ஜம்புத்வீபம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இதுவே நம் நாட்டின் தொன்மையான பெயரும் கூட. பௌத்தர்களுக்கு போதி மரம், கிறிஸ்தவர்களுக்கு யூத மரம் – ஊசியிலை மரம் – ஓக் மரம், இஸ்லாமியர்களுக்கு பேரிட்சை, அத்தி, மாதுளை மரங்கள், ஜைனர்களுக்கு ஆல், அரசு மரங்கள் என சகல மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித மரம் உண்டு என்கிறது உலக வரலாறு. ஆனால் இந்து மதத்தில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் திருக்கோயிலில் ஒவ்வொரு விசேஷ மரம் புனித மரமாக வணங்கப்படும். பெரும் வனமாக இருந்த பகுதிகள் நகரமாக மாறும்போது அந்த மரம் அழிந்துவிடக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் நம் முன்னோர்கள், அதில் சில மரங்களை தல விருட்சம் என்ற பெயரில் பாதுகாத்து வைத்தார்கள். அந்த மரமே அந்த ஊரின் வரலாற்றை சொல்பவையாகவும் இருந்தது. அபூர்வமாக கும்பகோணம் திருவிசைநல்லூர் சிவயோகநாதர் கோயிலில் 8 தல விருட்சங்கள் உள்ளன. அவை வன்னி, உந்து வில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசு வில்வம் என்பவை.
சைவர்களுக்கு கோயில் என்றாலே அது தில்லை தான். தில்லை மரங்கள் சூழ்ந்த வனம் என்பதால் அந்த ஊருக்கு தில்லை என்றே பெயர் வந்தது. அதுவே தில்லைக் கோயிலின் தல விருட்சமாகவும் இருந்து வந்தது. ஆனால் அங்கே இப்போது பெயருக்குக் கூட ஒரு தில்லை மரம் இல்லை என்பது எத்தனை அதிர்ச்சியான விஷயம். சிதம்பரத்திலேயே இந்த நிலை என்றால் சிறு கோயில்களில் கேட்கவே வேண்டாம். கடம்ப வனம் என்றே அழைக்கப்படும் மதுரையில் கடம்ப மரங்கள் எத்தனை உள்ளது சொல்ல முடியுமா?
மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் ஒரே ஒரு கடம்ப மரமும் கவசம் பொருத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இதைப்போலவே நெரூர் போன்ற சில ஆலயங்களில் மட்டுமே கவசம் போர்த்தப்பட்டு தல மரங்கள் உயிரோடு இருந்து வருகின்றன. புதிதாக மரங்கள் உருவாக்கப்படவே இல்லை.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், மயிலாப்பூர் கபாலி கோயில் போன்ற வெகு சில கோயில் மரங்கள் திசு வளர்ப்பு முறை மூலம் மீண்டும் தல மரமாக வளர்க்கப்பட்டுள்ளது. ஆனால் பெயரே தெரியாமல் பல அற்புத மரங்கள் இன்று அழிந்து போய்விட்டன. ‘மட்டிட்ட புன்னயங்கானல் மடமயிலை’ தலத்திலேயே புன்னை அபூர்வமாகிவிட்டது. நாகை மாவட்டத்தில் உள்ள திருவிற்குடி அருகே உள்ள திருப்பயன்குடி ஆலயத்தில் உள்ள சிலத்தி மரம் அபூர்வ வகையாகும். இதுவும் அழிவின் விளிம்பில் உள்ளது. ராமாயணம் தந்த மரா மரம் சிறப்பு வாய்ந்தது, அந்த மரா மரமே, ஆச்சாள் மரம் என்று ஒரு கருத்தும் உண்டு. அதுவும் இன்று அருகிப் போய்விட்டது.
தாவரங்களை வைத்தே ஊர்களின் பெயர்களை வைத்தோம். மரமே கடவுள் என்பதே நம் தொன்றுதொட்ட வழிபாடாக இருந்தது. வன்னி, கொன்றை, வில்வம் சிவன்; ஆல், அரசு, அத்தி விஷ்ணு; வேம்பு அம்மன்; தாமரை திருமகள்; கல்லாலம் தென்முகக் கடவுள் இப்படி எல்லா கடவுளருக்கும் ஒரு தாவர அடையாளம் உண்டு. தல விருட்சம் என்பது ஒரு இடத்தில் கோயில் கட்டுவதற்கு முன்பு அங்கு இறைவன் எழுந்தருளி இருந்த இடம் எனப்படுகிறது. அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு. திருவானைக்காவில் வெண்நாவல் மரம், காஞ்சியில் மாமரம், திருவொற்றியூரில் மகிழமரம் என இப்படி அத்தி, அரசு, வேம்பு, கடம்பு, கடுககாய், எட்டி, கருங்கலி, கல்லாலம், கல்லத்தி, சந்தனம், பலா, பாதிரி, புரசு, புளி, மருதம், மா விலங்கம், ஆல், வாகை, விளா, கவம்பு, கட்டாத்தி, கதலி, இலந்தை
கிளுவை, குருந்து, கோங்கு , இலுப்பை, அகில், சிறுபூளை, தர்ப்பை, மூங்கில், ஆயா, ஆச்சாள், கொன்றை, ஆமணக்கு, தில்லை, வில்வம், விழல், விழுதி, நாகலிங்கம், வெல்வேல், காரை, எலுமிச்சை, எருக்கு, ஊமத்தை, மாதவி, செண்பகம், பவள மல்லிகை, நந்தியாவட்டம், தாழை, வஞ்சி, நெல்லி, பராய், பன்னீர் மரம், பாலை, பிரம்பு, புன்னை, மந்தாரை, பனை, கோரை, சேராங்கொட்டை, செம்மந்தாரை, வெப்பாலை, வாதநாராயணம், வேள்வேல், ஆனைப்புளி, பதிமுகம், மகோகனி, சிறுநாகப்பூ, தோத்தாங்கொட்டை, இயல்வாகை வால் மிளகு, தென்னை என சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை தமிழக கோயில்களின் தல விருட்சமாக சுமார் 300 மரங்களும் செடிகளும் இருந்து வந்துள்ளன. ஆனால் தற்போது நூறுக்கும் குறைவான மரங்களே தல விருட்சமாக இருந்து வருகின்றன. அதிலும் பெரும்பாலான கோயில்களில் வன்னி, வில்வம், கொன்றை மரங்களே தல விருட்சங்களாக இருந்து வருகின்றன என்பது வேதனையான உண்மை.
மலைச்சுத்தி, மரமஞ்சள், குண்டுமணி (குன்றிமணி), இலுப்பை, மாவிலங்கம், சந்தன வேங்கை, தான்றி, மகாவில்வம், திருவோடு, ஒரு முக ருத்ராட்சம், போலிச்சந்தன், கல் இச்சி, பிள்ளை மருது போன்ற மரங்கள் முன்பு தல விருட்சமாக இருந்து இப்போது அழிவின் விளிம்பில் இருந்து வருகின்றன. இலுப்பை மரத்தில் தேர் செய்து அது 200 ஆண்டுகள் தாண்டியும் ஓடிய வரலாறு எல்லாம் தமிழ்நாட்டில் உண்டு.
கோயில் மரமாக மட்டுமின்றி, அரசர்களின் காவல் மரமாகவும் விருட்சங்கள் இருந்து பாதுகாக்கப் பட்டன. ஒரு கோயிலின் விருட்சம் பாதிக்கப்பட்டால் அது ஊருக்கு தீங்கு என்று சொல்லப்பட்டது. புதிதாக அந்த மரக்கன்று வளர்க்கப்பட்டது. இப்போது அதெல்லாம் இல்லை. மரங்களை குலதெய்வமாக வழிபடும் வழக்கம் தென்னாட்டில் உண்டு. இது ஆரம்பத்தில் மரங்களே கடவுளாக இருந்தன என்பதை நிரூபிக்கிறது. பிறகுதான் காலம் செல்ல செல்ல மரத்தின் அடியே சிவலிங்கம், வேல், வாள், ஈட்டி, சூலம் வைத்து குறிப்பிட்ட கடவுளரை வழிபடும் முறையும் வந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
மரத்தில் உறையும் முனி, யட்சி, இயக்கி யாவும் தங்களைக் காக்கும் என்ற நம்பிக்கை பரவலாக தென் இந்தியாவில் உள்ளது. ஊட்டி போன்ற மலைவாழ் மக்கள் வாழும் பகுதியில் சேல மரம் என்ற மரத்தை குல தெய்வமாக வழிபடும் வழக்கம் உள்ளது. கருவறை தெய்வங்களை எல்லாரும் தொட்டு, சுற்றி வந்து வணங்க முடியாது என்பதால் தல விருட்சங்கள் அந்த பெருமையைக் கொண்டன. இறைவனே உருவாக்கிய விருட்சங்கள் இறைவனின் தன்மையைக் கொண்டவை என்பது ஐதீகம்.
திருத்தணியில் ஒரு கன்னிமார் கோயில் உள்ளது. இது மகா சித்தர்கள் வசித்த இடம், அவர்களால் 7 கன்னியர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்கு ஏழு மூலிகை மரங்கள் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்துள்ளன. இதில் அரசு, கல்லரசு, கரும்பிலி, தேவ ஆதண்டம், இருளி, வேம்பு, ஆலமரம் போன்றவை இணைந்துள்ளன. சாதாரணமாக இருக்கும் மரங்கள் பல, தல விருட்சமாக ஆலயங்களில் இருக்கும்போது அவை அதிசயங்கள் நிறைந்த மரமாகிறது என்பதும் வியப்பான உண்மை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உரிகம் என்னும் ஊரில் உள்ள அதிசய புளியமரத்தின் விதைகள் வேறெங்கும் முளைக்காத தன்மை கொண்டது. கும்பகோணம் – மாயவரம் சாலையில் திருவாலங்காட்டுக்கு அருகே உள்ள வேப்ப மரத்தின் இலைகள் எல்லாம் வெள்ளையாகவே இருக்கின்றன. அதன் கீழே வீற்றிருக்கும் அம்மனும் வெள்ளை வேம்பு மாரியம்மன் என்றே அழைக்கப்படுகின்றார். எனவே வீதிகளில் நின்று இருக்கும் மரங்கள் கோயிலில் குடி கொள்ளும்போது அவை வணங்கப்பட்டு புனிதமாக, அதிசயமாக மாறிவிடுகின்றன.
எவர் ஒருவர் நல்மரங்களை நடுகிறாரோ அவரிடம் தேவதைகளும் முனிவர்களும் கந்தர்வர்களும் காத்திருந்து அருள் புரிவர் என்கிறது சுரபாலரின் விருஷ ஆயுர்வேத நூல். சாந்தோக்கிய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்பவனுக்கு அவன் தந்தை பலவாறு ஞானம் அளிக்கிறார். அதில் ஒன்று முக்கியமானது.
“மகனே அந்த ஆல மரப் பழத்தைப் பிரித்து உள்ளே பார்,
மிக மிகச் சிறிய விதைகள் இருக்கின்றன, தந்தையே
அந்த சிறிய விதையை எடுத்து பிரித்துப் பார்.
பிரித்துவிட்டேன். ஒன்றுமே தெரியவில்லை தந்தையே.”
ஆம், ஒன்றுமே தெரியாத அந்த ஒன்றிலிருந்துதான் இந்த பிரம்மாண்ட ஆலமரம் உருவாகி உள்ளது. இதுதான் பிரம்மம். உன்னையே அறிந்தால் பிரம்மத்தை அறியலாம்.
விருட்சங்கள் யாவும் பிரம்மத்தின் வடிவம் என்பதால் அவை கடவுளாகவும் போற்றப்படுகின்றன. அதை அழிய விடுவதை விட வேறு தீங்கு தரும் செயல் இல்லவே இல்லை.