காசியில் இறக்க விரும்புவது இதனால் தானா? ஆன்மாவின் விருப்பம்!

மெய்ஞ்ஞான பூமியாம் நம் பாரதத்தின், ஆன்மிகத் தலைநகரமாக விளங்குவது காசி. காசிக்குச் செல்லவேண்டும் என்பது ஒவ்வொரு இந்துக்களின் விருப்பமாகவே உள்ளது. அது கடமையும் என்கிறார்கள்.

காசி என்றால் ஒளிரும் நகரம் என்றே பொருள். நிஜமாகவே 24 மணி நேரமும் ஒளிரும் நகரம்தான் இது. புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கம் என்றே இந்த நகரைச் சொல்கிறார்கள். ஆம், எங்கு திரும்பினாலும் ஒரு அழகிய காட்சி தென்படும். 5000 கால வரலாற்றுச் சிறப்பு கொண்ட காசி மாநகரம் எல்லா புராணங்களிலும் போற்றப்படுவது. ஏழு புண்ணிய நகரங்களில் மூத்ததான காசி, மயான பூமி என்றும் போற்றப்படுகிறது. 3000 ஆண்டுகளாக காசியில் எங்கோ எப்போதும் இடைவிடாமல் ஒரு சவம் எரிந்து கொண்டே இருப்பதுவும் ஒரு சிறப்பு. காசிக்கு அடையாளம் கங்கை. பரந்துவிரிந்து ஓடும் கங்கை மாதா சகலரின் பாவங்களையும் தான் ஏற்றுக் கொள்பவள். வருணா, அசி என்ற இரு ஆறுகள் ஓடுவதால் இது வாரணாசி என்றும் அழைக்கப்படுகிறது. கங்கை நதிக்கரையில் புகழ்பெற்ற 48 காட் அதாவது படித்துறைகள் உள்ளன. அங்கிருந்தே கங்கையில் குளிக்கவும் ஆராதிக்கவும் முடியும். அதில் முக்கியமானவை அசி காட், மணிகர்ணிகா காட், அனுமன் காட், அரிச்சந்திரன் காட் என்பவை.

காசி வெறும் கோயில் நகரம் மட்டுமல்ல, அது நம்முள் ஆன்மிக விழிப்பை ஏற்படுத்தும் ஒரு உன்னத அனுபவமாகவும் உள்ளது. அங்கு நம்ப முடியாத பல ஆச்சர்யங்கள் உள்ளன. பெரியவர்கள் சொல்வதுபோலவே அங்கு எத்தனை பிணங்கள் எரிந்தாலும் கொஞ்சமும் நாற்றம் வருவதே இல்லை. புகை தான் மூச்சை முட்டச்செய்யும். பிரம்மத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்த பிரம்மமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு கொண்டதாகவே இந்த நகரம் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். இங்கே இறைவனை எளிதில் தொடர்பு கொள்ள முடியும் என்பதால்தான் நாங்கள் இங்கேயே வசிக்கிறோம் என்கிறார்கள் இங்குள்ள துறவிகள்.

இங்கு வாழ்வதும் எளிதுதான். கங்கையில் குளிக்கலாம். படித்துறையில் படுத்துக் கொள்ளலாம். எங்காவது அன்னதானமும் கிடைத்துவிடும். கர்மாவற்ற வாழ்க்கை இங்கே சாத்தியம் என்கிறார்கள். மேலும் இங்கு எப்போதும் சிவசக்தி நிலைஅதிர்வுகள் வெளியாகிக் கொண்டே இருப்பதால் தியானமும் யோகமும் எளிதில் வசப்படும் என்கிறார்கள். ஈசனே வடிவமைத்த காசியில் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள் செயல்படுகின்றன. நம்முடைய 108 ஆதாரப் புள்ளிகளையும் செயல்படுத்த இங்கே 108 பீடங்கள் அமைந்துள்ளன. அவை 54 சிவத்தலங்களாகவும் 54 சக்தி தலங்களாகவும் உள்ளன. காசியில் செய்யப்படும் சப்தரிஷி பூஜை ஈசனால் கற்பிக்கப்பட்டது. இது முன்பு காசியில் உள்ள 468 கோயில்களிலும் செய்யப்பட்டதாம்.

காசியில் உள்ள முக்கிய ஆலயம் காசி விஸ்வநாதர் கோயில். இது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை உங்களுக்கு அளிக்கும். இங்கே 12 ஜோதிர்லிங்க மகிமைகள் சொல்லும் கேந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காசி அன்னபூரணி தரிசனமும் அலாதியானது எனலாம். உலக உயிர்களுக்கும் படி அளிக்கும் அந்த தயாபாரி உங்களை தனது பார்வையால் ஆசீர்வதிப்பதை இங்கு உணரலாம். அடுத்து விசாலாட்சி அன்னை, நீளமான விழிகளைக் கொண்டவள் என்று அர்த்தம் கொண்ட இவளும் பிள்ளைகளைக் காக்கும் பெருந்தேவியாகவே இங்கு அருளுகிறாள்.

காசிக்குக் காவல் தெய்வம் காலபைரவர். இவரை வணங்காமல் உங்கள் காசி யாத்திரை நிறைவு அடையாது என்பதே உண்மை. சகலருக்கும் சரியான நீதியை வழங்கும் இந்த பைரவரை காசி மக்கள் நீதிபதியாகவே கருதுகிறார்கள். தாங்கள் ஏதாவது தவறு செய்தால் பைரவர் தங்களை அடுத்த பிறவியில் காசியில் பிறக்கவிட மாட்டார் என்று அஞ்சுகிறார்கள். காசி ஆன்மிக நம்பிக்கை கொண்ட மக்களால் நிரம்பியுள்ளது. இவர்கள் அன்பானவர்கள், யாத்ரீகர்களின் மீது அக்கறை கொண்டவர்கள்.

ரிக் வேதம் காசியை அறிவு தரத்தக்க நகரம் என்கிறது. ஸ்கந்த புராணம் மூவுலகும் காசிக்கு இணையாகாது என்கிறது. காசியும் தமிழ்நாடும் பெரிதும் ஒற்றுமை கொண்டவை. காசியில் வசிப்பவர்கள் ராமேஸ்வரத்துக்கு வர விரும்புவதும், தமிழகத்தில் வசிக்கும் இந்துக்கள் காசிக்கு செல்ல விரும்புவதும் தொன்றுதொட்ட வழக்கமாகவே உள்ளது. சோழர் காலத்தில் வாரணாசி மடம் என்ற பெயரைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

அதிவீரராம பாண்டியர், பராக்கிரம பாண்டியர், குமரகுருபரர், தஞ்சை சரபோஜி மன்னர், கோடகநல்லூர் சுந்தர சாமிகள், காஞ்சி மகாபெரியவா, முத்துசாமி தீக்ஷிதர், பாரதியார், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் என பல ஞானியரோடுத் தொடர்பு கொண்டது காசி.

அந்த காலங்களில் காசிக்கு சென்று தரிசனம் செய்வது என்பது மிக மிக சிரமமானது. பொதுமக்களுக்கு மட்டுமல்ல, அரசர்களுக்கும் அதுவே. காசிக்கு செல்வதில் சிரமம் இருந்த காரணத்தால் அதிவீரராம பாண்டியர் தென்காசி என்ற தலத்தை உருவாக்கி அங்கே விஸ்வநாதரை எழுந்தருளச் செய்தார். அதேபோல 16-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியன், காசிக்கு செல்ல விரும்பி, ஈசனின் ஆணைப்படி சிவகாசி என்ற தலத்தை உருவாக்கி அங்கு காசி விஸ்வநாதரை எழுந்தருளச் செய்தான் என்கிறது வரலாறு. இப்படி தென்காசியும் சிவகாசியும் போற்றும் நாதராகத் திகழ்கிறார் வடகாசி விஸ்வநாதர். சங்க இலக்கியங்களில் காசி நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவாரத்தில் காசி வைப்புத் தலமாக உள்ளது. ‘மாட்டூர் மடப் பாச்சிலாச்சிராமம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி’ என்கிறது தேவாரம்.

காசியில் இறக்க முக்தி என்ற காரணத்தால் தொன்றுதொட்ட காலத்தில் இருந்தே வயதானவர்கள் அங்கு சென்று வாழ்வதும் பிறகு அங்கேயே எரிக்கப்படுவதும் நமமவர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. முதியவர்களுக்கு மட்டுமல்ல, திருமணமாகவிருக்கும் மாப்பிள்ளை கூட கோபித்துக் கொண்டால் போக நினைப்பது காசிக்கு தான் என்பதை இன்றைய திருமணங்களில் காசி யாத்திரை சடங்குகளில் காணலாம்.

காசி நகரம், ஆன்மிக அடையாளங்களைக் கொண்டுள்ள தொன்மையான நகரம் என்பதை நீங்கள் இங்கு வந்தால் கண்டு கொள்ளலாம். அதுமட்டுமா, நீங்கள் யார் என்பதையும், ஏன் இங்கு வந்தீர்கள் என்பதையும் கூட காசி கட்டாயம் காட்டிக் கொடுத்துவிடும்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )