திருப்பதி வெங்கடாசலபதி யார் முகத்தில் விழிக்கிறார் தெரியுமா?
கலியுகக் கடவுளாக, கற்பக விருட்சமாக திருவேங்கடமலையில் வீற்றிருப்பவர் வேங்கடாசலபதி. இவரைத் தரிசித்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டி மகத்தான வாழ்வைப் பெறலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதிகாலையில் வேங்கடவனின் திருமுகத்தில் விழித்தால் பெரும்பேறு. ஆனால் அந்த வேங்கடவனே தினமும் யார் முகத்தில் விழிக்கிறான் தெரியுமா? அதாவது தினமும் யாருக்கு முதல் தரிசனம் தருகிறான் தெரியுமா?
ஏழுமலையானின் காவலர்களான துவார பாலகர்கள் இருபுறமும் ஏங்கி நிற்க, தங்க வாயிலின் முன்னே திருமலை தலைமை ஜீயர் எனும் பெரிய கேள்வியப்பன் தலைமையில் அர்ச்சகர் குழாம் காத்திருக்க, அன்னமாச்சார்யரின் பூபாளக் கீர்த்தனை ஒலிக்கும். அதற்கடுத்து தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி தேனாக இசைக்கப்படும். அதன்பின்னர் மணிகள் ஒலிக்க, பேரிகையும் ஊதுகுழலும் சேர்ந்து இசை எழுப்பும். கணித்தபடி சரியான நேரம் நெருங்கியதும், தூப, தீபங்கள் சூழ பலத்த கோவிந்த நாமத்துடன் திருக்கதவம் திறக்கப்படும்.
பெருமாளுக்கு முன்னே நிற்பவர்கள் யாவரும் ஒதுங்கி நிற்கத் திருவாயில் திறந்ததும் முன்னே வந்து நிற்பவர் ஒரு யாதவர். ஆம், கன்று பசுவுடன் ஒருசேர வந்திருந்து பரந்தாமனை முதன்முதலாகக் காண்பவர் ஒரு மாட்டிடையர்! காலங்கள் பல மாறியபோதும் இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. ஆவினங்களின் தலைவனான அந்த கோவிந்தன் இன்றும் ஒரு யாதவருக்கே முதல் தரிசனம் கொடுத்து அவர் முகத்தில் தான் விழிக்கிறார் என்பது அவனது எளிமைக்கு ஒரு சான்று அன்றோ?