ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி! அன்பும் கருணையுமே ஆண்டவனின் அடையாளங்கள்!
நம் இந்து தர்மத்தை நிலை நாட்ட தோன்றிய எத்தனையோ ஞானிகளில் முக்கியமானவர்; முதன்மையானவர் ஸ்ரீஆதி சங்கரர். ஈஸ்வரனின் அம்சமாக பிறப்பெடுத்த இந்த மஹான், ஆறு தொன்மையான சமயங்களை ஒன்றிணைத்து ஒரே சனாதன சமயமாக்கி அருளியவர். நம் சமூகம் மனம் போன போக்கில் பல்வேறு மூடப் பழக்கங்களையும் சடங்குகளையும் கொண்டிருந்தபோது அவற்றை நீக்கி மக்களை பண்பட்ட வழியில் திரும்பியவர் ஆதிசங்கரர். இறைவனுக்கு இணையான அந்த மானுட தெய்வத்தின் அவதார தினம் இன்று.
இவர் எந்த ஆண்டு பிறந்தார் என்பதில் காலக் குழப்பம் அதிகம் உண்டு. 20000 ஆண்டுகளுக்கு முன்பு என சாஸ்திரங்கள் சில கூறுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு என சில ஞான நூல்கள் கூறுகின்றன. 7-ம் நூற்றாண்டில் பிறந்தவர் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எப்படியோ தட்சிணாமூர்த்தியின் அம்சமாக, குரு என்ற சொல்லுக்கு அர்த்தமாக ஜகத்குருவாக தோன்றியவர் இவர். கேரள மாநிலம் காலடி என்ற ஊரில் சித்திரை திருவாதிரையில் சிவகுரு, ஆர்யாம்பா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார், சிறுவயதிலேயே கனகதாரா ஸ்தோத்திரம் பாடி திருமகளின் அருளால் பொன்மாரி பொழிய வைத்தார். தாயிடம் பிரிந்து சென்று 8 வயதிலே சந்நியாசம் ஏற்றார்,
மத்தியப்பிரதேசத்தில் ஒங்காரேஸ்வர க்ஷேத்திரத்திலே சந்நியாசம் பெற்று, காசி சென்று, வேதங்களும் வித்தைகளும் கற்று, வாதங்கள் செய்து எல்லாவற்றிலும் வென்றார். பத்ரி நாராயணம் சென்று அங்கு பத்திரி நாராயண ஸ்வாமியைப் பிரதிஷ்டை செய்வித்தார். நாடு முழுவதும் யாத்திரை செய்து பல இடங்களில் திருக்கோயில்களை உருவாக்கினார். கொல்லூரில் மூகாம்பிகை அன்னையை எழுந்தருள செய்தார். கடைசியாக நகரேஷு காஞ்சி என்று போற்றப்படும், ஏழு புண்ணிய ஷேத்திரங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வந்து, அங்கே சர்வக்ஞபீடம் ஏறி ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் குருவம்சத்தை தொடங்கி வைத்தார் ஸ்ரீஆதிசங்கரர்.
இந்த மஹான் ஏற்றிய ஒளியிலேயே இன்றைய நம் தர்மம் செழித்து வளர்ந்துள்ளது. இவர் உபதேசித்த அருள்மொழிகளாலாயே இன்று நம் வாழ்க்கை சிறப்படைந்து உள்ளது. காட்டு மனிதர்களாக திரிந்த சமூகத்தை ஒன்றிணைத்து உலகின் தலைசிறந்த குடிமக்களாக மாற்றிய பெருமை ஆதிசங்கரைரையே சேரும்.
நமது தர்மத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்ப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதைக்கு விளக்கவுரை எழுதியவர் இவர். அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர் ஸ்ரீசங்கரர். விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கு இவர் விளக்கவுரை எழுதினார். சௌந்தர்ய லஹரி, சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் உள்ளிட்ட பல ஞான நூல்களையும் இயற்றியவர்.
32 ஆண்டுகளே இந்த மண்ணில் உலாவி, அநேக தத்துவங்களும் நூல்களும் இயற்றி இந்த மண்ணுலகை வாழ்வித்தவர் ஆதிசங்கரர். இவரே முதல் அகராதியான அமரகோஷம் என்ற நூலைக் காப்பாற்றி இலக்கிய உலகுக்கு அளித்தவர். இந்த மஹான் அவதரித்த இந்த புண்ணிய தினத்தில் அவர் உபதேசித்த மனிதநேய பண்புகளை நெஞ்சில் ஏற்றி சகலரையும் அன்போடு நேசித்து உயர்வடைவோம்.
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர!