மூசிகம் விநாயகருக்கு வாகனம் ஆனது எப்படி?

மூசிகம் விநாயகருக்கு வாகனம் ஆனது எப்படி?

சபரி என்ற முனிவர் காட்டில் பன்னசாலை அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார். அவர் ஆற்றிற்கு நீராட சென்றிருந்த போது, முனிவரின் மனைவியான மனோமயை அவர் திரும்பி வருவதற்குள் விநாயகருக்கு பூந்தோட்டத்தில் பூப்பறித்து, மாலையாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றியது. அவள் பூப்பறித்துக் கொண்டிருந்த வேளையில் அவள் அழகில் மயங்கிய விநாயகர் பக்தனான கிரவிஞ்சன் என்ற காந்தர்வன், தோட்டத்தில் இறங்கி அவளது கையைப் பிடித்தான். இதனால் கோபம் கொண்ட மனோமயை, நான் சபரி என்ற முனிவரின் மனைவி. நீ காந்தர்வனானாலும், உன்னை என்னால் எரித்து சாம்பலாக்க முடியும். ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. முனிவர் வருவதற்குள் நீ இங்கிருந்து சென்றுவிடு. இல்லையென்றால் உன்னை முனிவர் சபித்து விடுவார் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, அவ்விடத்தில் சபரி முனிவர் வந்துவிட, அவன் மீது கோபம் கொண்டு, இன்னொருவரின் மனைவி என்று தெரிந்தும் மோகம் கொண்டமையால், நீ மண்ணைத் தோண்டி வாழும் மூசிகமாக மாறி இவ்வுலகில் வாழ்வாய் என்று சபித்தார். இதைக் கேட்டு தன் தவறை உணர்ந்த கிரவிஞ்சன் முனிசிரேஸ்ரரே நான் செய்த தவறை மன்னித்து எனக்கு சாபவிமோசனம் தந்தருளுங்கள் என்று முனிவரின் பாதங்களில் விழுந்து மன்றாடினான். இதனால் மனமிறங்கிய முனிவர், இன்னும் சில தினங்களில் பரராச முனிவரின் ஆச்சிரமத்தில் விநாயகர் அவதரிக்க உள்ளார். எனவே நீ விநாயகரை தரிசித்துப் பேறு பெறுவாயாக என்று கூறினார். உடனே கிரவிஞ்சன் மூசிகமாக மாறினான். அவ்வாறு மூசிகமாக மாறி மண்ணைத் துளைத்துக் கொண்டு திரியும் நாளில், ஒருநாள் நாரதர் தேவேந்திரனது சபைக்குச் சென்றார். தேவேந்திரா, கேமவதி என்ற நாட்டின் அரசனான அபிநந்தனன், இந்திரப்பதவியை அடைவதற்கு யாகம் ஒன்றை செய்வதாகவும், அதை யாரும் இதுவரை செய்யாத அளவிற்கு பிரம்மாண்டமாகச் செய்வதாகவும், அதுமட்டுமில்லாமல் மூவுலகங்களிலுமுள்ள முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் , ஞானிகளுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாகவும் நாரதர் கூறினார். ஆனால் உன்னை அழைக்காதது, உனக்கு பெரும் அவுமானம் என்றும் அத்துடன் அபிநந்தனன் யாக வலிமையால் இந்திரப் பதவியை அடைந்தாள் உன் நிலைமை என்னவாகும் என்றும் கேட்டார். நாரதரது வார்த்தைகளைக் கேட்டு கடுங்கோபமுற்ற இந்திரன் செய்வதறியாது காலநேமியை தியானித்தான். மறுகணம் உக்கிரமாக வடிவமெடுத்த காலநேமி இந்திரன் முன் தோன்றி “தேவநீர் என்னை அழைத்த காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு இந்திரன், இந்திரப் பதவியை அடைவதற்காக அபிநந்தனன் செய்யும் யாகத்தை அழித்து, அவனையும் கொன்றுவிட்டு வருமாறு கூறினார். இதைக்கேட்ட காலநேமி அபிநந்தனின் யாக சாலைக்குள் புகுந்து அதை அழித்து, யாகம் செய்த அந்தணர்களையும், முனிவர்களையும் கடுமையாகத் தண்டித்தான். அத்துடன் அங்கிருந்த அபிநந்தனையும், அவனது படை வீரர்களையும் கொன்று விட்டான். இதை கண்டு அங்கிருந்த முனிவர்களும், பிராமணர்களும் தப்பிச் செல்ல, அவர்களையும் துரத்தி தாக்கினான். அவ்வாறு பயந்து ஓடிய முனிவர்கள் விநாயகப் பெருமானின் பாதங்களில் விழுந்து தம்மை காப்பாற்றுமாறு வேண்டினர். இதை கேட்ட விநாயகர் , வரேனியன் என்ற அரசனின் மகனாக உங்களைப் காப்பாற்றுவதற்காக அவதரிப்பேன் என்று கூறினார். இதை கேட்டு மனமகிழ்ந்த முனிவர்கள், விநாயகப்பெருமானை துதித்து விட்டுச் சென்றனர். மன்னன் வரேனியன் திருமணம் செய்தும், பல ஆண்டுகள் பிள்ளை பேரின்மையால் வருந்தி விநாயகரை வணங்கி வந்தார். அவருடைய மனைவியான புஷ்பகையும் விநாயகருக்கு அருகம்புல்லால் மாலையிட்டு வணங்கி வந்தாள். இதன் பயனாக அவள் வயிற்றிலே விநாயகர் திரு அவதாரம் செய்தார். புஷ்பகைக்கு நான்கு கால்களும், தும்பிக்கையும், நான்கு கரங்களும், பெருந்த தொந்தியும் கொண்டு குழந்தை ஒன்று பிறந்தது. அதைக் கண்டு பயந்து போன புஷ்பகை தன் தோழியிடம் கூறினாள். இவளுடைய தோழிகள் குழந்தைப் பிறந்ததை மன்னன் வரனேனியனிடம் தெரிவிக்க, அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த மன்னன் குழந்தையைக் கண்டதும் மனம் வருந்தி, பிறந்தது விநாயகர் என்று அறியாது அவலட்சணமான அசுரக்குழந்தை நமக்கு பிறந்து விட்டது என்று எண்ணி வருந்தினான். ஜோதிடரிடம் சென்று கேட்ட போது, இக்குழந்தையால் அரசருக்கு கேடு வருமென்றுக் கூற, உடனே அரசனின் கட்டளைக்கிணங்க அக்குழந்தையை வீரர்கள் எடுத்துச் சென்று, பரராச முனிவரின் ஆச்சிரமத்திற்க்கு அருகில் இருந்த குளிக்கரையில் விட்டுச் சென்றனர். நீராட வந்த பரராச முனிவர் குழந்தையை கண்டதும் மகிழ்ச்சியுற்றார். அக்குழந்தை விநாயகர் என்று அவருக்குத் தெரியும். எனவே ஆசையோடும், அரவணைப்போடும், அக்குழந்தையை அன்போடும் பரராச முனிவர் அவரது ஆச்சிரமத்தில் வளர்த்து வந்தார். அக்குழந்தையான விநாயகர், வளர்ந்து பரராச முனிவரின் ஆச்சிரமத்தில் உள்ள பூஞ்சோலையில் ஓடி விளையாட ஆரம்பித்தான். அப்போது சபரி முனிவரால் சபிக்கப்பட்ட கிரவிஞ்சன் அங்கிருந்த மரங்களின் வேர்களை அறுத்து நாசஜ் செய்தான். அதைக்கண்ட பரராச முனிவர் துயருற்றார். முனிவரின் துயரைக் கண்ட விநாயகர், மூசிகனை நோக்கி தனது பரசத்தை ஏவினார். பரசு மூசிகனை தாக்க வந்தது. இதைக்கண்ட மூசிகன் நிலத்தைத் துளைத்துக்கொண்டு ஓட, பரசு விடாமல் அவனை பின் தொடர, மூசிகன் பாதாள உலகம் வரைச் சென்றான். பரசு மூசிகனை விடாமல் பாதாள உலகம் வரை துரத்தி கொண்டேச் சென்றது.அதற்கு மேல் அவனால் ஓட முடியவில்லை. அதனால் மூசிகன் தான் உயிர் பிழைக்க விநாயகரை நினைத்து தன்னை காப்பாற்றுமாறு வேண்டினான். விநாயகரின் பக்தனான இவன், சபரி முனிவரின் சாபத்தால் மூசிகனானதை அறிந்த விநாயகர் அவனைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்கு மூஷிகம் வாகனமானது.

CATEGORIES

COMMENTS Wordpress (0) Disqus (0 )