திருவண்ணாமலையில் தீ மிதி விழா!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில், அம்மன் கோயில்களில் திருவிழா களை கட்டும்; வீதியுலாவும் பூச்சொரிதலும் அமர்க்களப்படும்; பலியிடுவதும் பொங்கலிடுவதும் விமரிசையாக நடந்தேறும். முக்கியமாக… அம்மன் ஆலயத்துக்கே உண்டான முக்கிய வழிபாடான தீமிதித் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிலிர்ப்புடன் கலந்துகொள்வார்கள்.
இதேபோல், சிவாலயம் ஒன்றிலும் தீமிதித் திருவிழா கோலாகலமாக நடைபெறுவதுதான் ஆச்சரியம். அந்தத் தலம்… எண்ணற்ற மகான்கள் வாழ்ந்த பூமி; நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை!
இங்கு மலையே இறைவனாக இருப்பதும், மலை மீது திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதும், மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, ஸ்ரீஉண்ணாமுலையம்மை சமேத ஸ்ரீஅண்ணாமலையாரை தரிசிப்பதும் நாம் அறிந்ததுதான்!
தவிர, ஸ்ரீஉண்ணாமுலை அம்பாளின் திருச்சந்நிதிக்கு எதிரில் மிகப் பெரிய தீமிதித் திருவிழா, ஆடி மாதத்தில் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.
பஞ்ச பூத ஸ்தலங்களில், திருவண்ணாமலையை அக்னி ஸ்தலம் என்பர். இந்தத் தலத்தில்தான், தன் உடலின் சரி பாதியை இல்லாள் பார்வதிதேவிக்குத் தந்து, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராகக் காட்சி அளித்தார் சிவபெருமான். ‘சிதக்னி- குண்ட- ஸம்பூதா தேவகார்யா- ஸமுத்யதா’ என்று ஸ்லோகம் ஒன்று உண்டு. அதாவது, அக்னியை உருவமெனக் கொண்டவள் என்று அர்த்தம். ஆகவே, இந்தத் தலத்து நாயகியான ஸ்ரீஉண்ணாமுலை அம்பாளுக்கு, ஆடிப்பூர நன்னாளில் தீமிதித் திருவிழா எடுத்து வணங்குகின்றனர், பக்தர்கள்.
வருடந்தோறும் ஆடி 18-ஆம் தேதி, ஆடிப்பெருக்கு நாளில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது ஆடிப்பூர விழா. ஆடி மாத 27-ஆம் நாளான ஆடிப்பூர நன்னாளில், திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 27 கிராமங்களில் இருந்து, மண்பாண்டம் செய்யும் பக்தர்கள் திரளாக வந்து, தீமிதித் திருவிழாவில் கலந்துகொண்டு, பூ (தீ) மிதித்து அம்பாளை வணங்குகின்றனர்.
இந்த நாளில், திருவண்ணாமலை திருத்தலத்துக்கு வந்து, தீமிதித் திருவிழாவைக் காண்பதுடன், ஸ்ரீஅண்ணாமலையாரையும் ஸ்ரீஉண்ணாமுலை அம்பாளையும் கண்ணாரத் தரிசிக்க, மனதுள் நிம்மதி பிறக்கும்; நினைத்த காரியம் நிறைவேறும்; சகல ஐஸ்வரியங்களுடன் வாழ்வது உறுதி எனச் சிலிர்ப்பு பொங்கத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.