ஸ்ரீ ஐயப்பனின் அறுபடை வீடுகள்
ஐயப்பனின் பெருமை சொல்லும் ஆலயங்களில் முக்கியமான ஆறு தலங்கள் ஐயப்பனின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறு தலங்களுமே ஸ்ரீ ஐயப்பனின் வாழ்க்கை வரலாற்றோடு சம்பந்தம் கொண்டவையாகவும் உள்ளது. ஆறு திவ்ய ரூபங்களில் இந்த அறுபடை வீடுகளில் காட்சி தரும் ஐயப்ப ஸ்வாமி பக்தர்களுக்கு விசேஷமானவர். குளத்துப்புழை, அச்சன்கோவில், ஆரியங்காவு, சபரிமலை, எரிமேலி, பந்தளம் ஆகிய இந்த ஆறு இடங்களில் தான் ஸ்ரீ சாஸ்தாவான ஐயப்ப ஸ்வாமி அருள்பாலிக்கிறார்.
குளத்துப்புழை – மண்ணகத்து மக்களை இம்சித்து வந்த மகிஷியை அழிக்கும் பொருட்டு விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த ஐயப்ப ஸ்வாமியின் பால வடிவத்தை கொண்டிருக்கும் ஆலயமே குளத்துப்புழை பால சாஸ்தா கோயில். குழந்தைகளை ஆராதிக்கும் விதமாகவே இந்த கோயில் அமைந்துள்ளது. செங்கோட்டையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஹரிஹரபுத்ரன், பால சாஸ்தா என்று இங்கு ஐயப்பன் கொண்டாடப்படுகிறார். மரத்தாலான இந்த கோயிலில் யட்சியம்மன், நாகராஜா, விநாயகர், பூதத்தார், பகவதி சந்நிதிகளும் உள்ளன. விஜயதசமியும், விஷுவும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குளத்துப்புழை பாலகனைக் கண்டபிறகே சபரிமலை யாத்திரை செல்ல வேண்டும் என்பது ஒரு மரபாகச் சொல்லப்படுகிறது. குழந்தை வரமருளும் கோயிலிது.
அச்சன்கோவில் – அலங்கார ரூபனாக ஸ்ரீ ஐயப்பன் குடிகொண்டுள்ள இடமே அச்சன்கோயில் திருத்தலம். பந்தள ராஜாவான ஸ்ரீ ஐயப்பன் மகிஷியை வதம் செய்ய அரச கோலத்தில் காட்சி தந்த இடமே அச்சன்கோயில் எனப்படுகிறது. பரசுராமரால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தில் ஐயப்பன் தர்மசாஸ்தா, கல்யாண சாஸ்தா, ராஜ சாஸ்தா என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். அமர்ந்த நிலையில் அமுதக்குடமும், வாளும் ஏந்தி, பூரணை, புஷ்கலை என்ற இரு தேவியரோடு கல்யாணக் கோலத்தில் காட்சி தருகிறார். மார்கழி அல்லது தை மாதத்தில் நடக்கும் பத்து நாள் மண்டலபூஜை இங்கு விசேஷமானது. செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அழகிய வன சூழலில் இந்த ஆலயம் அமைந்துளளது. திருமண வரம் அருளும் கோயிலிது.
ஆரியங்காவு – ‘ஆரியங்காவு அய்யாவே’ என பக்தர்கள் போற்றிக்கொண்டாடும் கோயிலிது. காவு என்றால் காடு. அரச கோலத்தில் புஷ்கலா தேவியோடு ஐயப்பன் இங்கு அருள்பாலிக்கிறார். பரசுராமர் நிறுவிய ஐந்து ஐயப்பன் கோயிலில் இதுவும் ஒன்று. செங்கோட்டையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோயில் உள்ளது. மார்கழி மாதத்தில் வரும் ஐயப்பன் – புஷ்கலை திருமண விழா இங்கு விசேஷமானது. கருப்பாயி அம்மனோடு கருப்பசாமி இங்கு காவல் காத்து நிற்கிறார். சபரி மலையைப்போலவே இங்கு 10 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அனுமதி இல்லை. பதவி உயர்வு, அரச போக வாழ்வு வேண்டுவோர் வழிபட வேண்டிய கோயிலிது.
சபரிமலை – கோடிக்கணக்கான பக்தர்களால் சூழப்படும் ஆலயமிது. பதினெட்டு மலைகள் சூழ அமைந்திருக்கும் ஸ்ரீ சபரிமலை ஐயப்பனின் சந்நிதியில் யோக வடிவில் காட்சி அளிக்கிறார். பிரம்மச்சாரியாக, யோக சின் முத்திரை தாங்கி தனியே குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கிறார். பதினெட்டு படிகளைத் தாண்டி பொன்னம்பலத்தில் வீற்றிருக்கும் இவரை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி நிம்மதியான வாழ்வைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு மண்டல பூஜையும், மகர ஜோதி விழாவும் விசேஷமானது. மஞ்சள் மாளிகை மாதா, பெரிய கடுத்த சாமி, சிறிய கடுத்த சாமி உள்ளிட்ட பல சந்நிதிகள் உள்ளன.
எரிமேலி – வில், அம்புகளை ஏந்தி புலிப்பால் கொண்டு வரச்சென்ற வேடன் வேடத்தில் ஸ்ரீ ஐயப்பன் எரிமேலியில் காட்சி தருகிறார். மத ஒற்றுமைக்கு மகத்தான சான்றாக இந்த எருமேலி ஆலயம் உள்ளது. ஆம், இங்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனின் தோழரான வாவர் சாமியின் தர்க்காவுக்கு சென்று வணங்கிய பின்னரே ஐயப்பனை வணங்குகிறார்கள். எரிமேலிக்கு வரும் கன்னி சாமிகள் இங்கு பேட்டை துள்ளிய பிறகே, அதாவது வண்ணப்பொடிகளை பூசிக்கொண்டு, இறகுகளை அணிந்து கொண்டு வேடனாக மாறுவர். மரத்தால் ஆன வில், வாள்களை வைத்துக் கொண்டு ஆடுவர். இதுவே பேட்டைத் துள்ளல். இது ஐயப்பனுக்கு துணையாக வருவோம் என்பதைக்கூறும் ஒரு சடங்கு. எருமேலிக்கு போகாமல் கன்னி சாமிகள் சபரி மலைக்கு போக முடியாது. எரிமேலியில் ஐயப்பனை தரிசித்தால் காரிய சித்தி உண்டாகும்.
பந்தளம் – பந்தளத்தில் தான் அரச குமாரனாக ஸ்ரீ ஐயப்பன் வளர்க்கப்பட்டார். ராஜசேகர பாண்டியரின் திருமகனாக வளர்ந்த ஐய்யப்பன் இங்கு அரண்மனை அருகே உள்ள வலிய கோயிக்கால் கோயிலில் குடி கொண்டுள்ளார். இங்கு பாதுகாக்கப்படும் ஐயப்பனின் திருவாபரணங்கள் தான் மகரவிளக்கு திருவிழாவின் போது சபரி மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஸ்ரீ ஐயப்பன் ஓடி விளையாடிய பகுதியே ஆலயமாக விளங்குகிறது என்பது மெய் சிலிர்க்கும் ஒரு அனுபவத்தை பக்தர்களுக்கு தருகிறது. செங்கனூர் அருகே உள்ள இந்த ஆலயத்தின் ஐயப்பனை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.
48 நாட்கள் விரதமிருந்து ஸ்ரீ ஐயப்பனை காணச்செல்லும் பக்தர்கள், எருமேலி, சபரி மலையோடு மேற்காணும் இந்த மற்ற 4 ஆலயங்களையும் தரிசிப்பது நலமானது என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். எனவே இந்த ஆறு தலங்களையும் வணங்கி ஐயப்பனின் வித்தியாச கோலங்களை தரிசித்து அருளைப்பெற வேண்டும்.