சிகாகோ மாநாட்டில் அவர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க வரிகள்

இந்திய இளைஞர்களின் வழிகாட்டியாக, நவீன ஆன்மிக உலகத்தின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தவர் விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் அவர் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிக்க வரிகள் சில..
பிறருடைய கொள்கையை வெறுத்து ஒதுக்காத பண்பு, அக்கொள்கைகளை ஏற்றுக் கொள்கிற பரந்த மனம் என்ற இரண்டினையும் உலகிற்கு கற்பித்த சமயத்திற்கு நான் உரியவன் என பெருமை கொள்கிறேன். எல்லாச் சமயங்களையும் அன்பினோடு நோக்குகின்ற பண்புடைமையில் எங்களுக்கு நம்பிக்கையுண்டு. அது மட்டுமில்லை, எல்லாச் சமயங்களையும் உண்மை சமயங்களென நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
இந்தியாவே ஆன்மிகத்தின் தாயகம். இந்தியாவில் மேலைநாடுகள் செய்ய வேண்டியது அடிப்படை வசதிகளைத் தருவது தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.
உலகில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்பது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக, அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் ஒலிக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கை இருந்தே தீரும்.
அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், ‘பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை’ என்று கூறுகிறார். பண்டைய இந்தியா பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாக இருந்தது.
கண்மூடித்தனமாக கருத்துக்களை நம்புவது என்பது ஆன்மாவை அழிக்கும் செயல். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள், ஆனால், எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
வலிமை மிகுந்தவன் எந்த நிலையிலும் எழுந்து நின்று என் விதியை நான் தீர்மானிப்பேன் என்று கூறுவான். அவனே வலிமைமிக்க இந்தியாவை முன் அழைத்துச் செல்வான்.
ஒரு கிறிஸ்தவர், இந்துவாகவோ, பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அதைப்போல ஒரு இந்து, பெளத்தராகவோ, கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் பிற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும். அதுவே உலக அமைதிக்கு வழிகோலும்.
புனிதம், தூய்மை, சேவை என்பதெல்லாம் எந்த ஒரு பிரிவின் தனிச் சொத்தும் அல்ல என்பதையும், ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப்படுகிறேன்.
உலகின் ஒருமைப்பாடு ஏதாவது ஒரு மதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், ‘சகோதரா, உனது நம்பிக்கை வீண்’ என்று சொல்லிக் கொள்கிறேன்.
பிரிவினைவாதம், வெறித்தனமான மதப்பற்று, மனிதத்தன்மை அற்ற மதவெறி, இவையெல்லாம் இந்த அழகிய பூமியை நெடுநாளாக அச்சுறுத்துகின்றன. அவை பூமியை மீண்டும் மீண்டும் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து, மனித குலத்தை அழித்து, நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. இதுபோன்ற தீமைகள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் மேன்மையான உயர்ந்த நிலையினை எப்போதோ எட்டி இருக்கும்.
இந்த மாநாட்டின் ஆரம்பத்தைக் காட்டவென்று முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், மக்களிடையே அச்சமூட்டும் இரக்கமற்ற செயல்களுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
இந்த மாநாட்டின் குரலானது அனைத்து விதமான மத வெறிகளுக்கும், வெறித்தனமான கொள்கைகளையும், துயரங்களையும் அழிக்கும் என்று நான் நம்புகிறேன். உதவி செய், சண்டையிடாதே, ஒன்றுபடுத்து, அழித்துவிடாதே, சமரசமும், அமைதியும் வேண்டும், கருத்து வேறுபாடு வேண்டாம் என்பதை ஒவ்வொரு சமயமும் தனது கொடியில் விரைவில் எதிர்ப்பிற்கிடையே எழுதும் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன்.