தியாகராஜ ஆராதனை விழா
காவிரி பாயும் தஞ்சைத்தரணி செந்நெல்லும் வாழையையும் மட்டும் விளைவித்துக் கொடுக்கவில்லை. நாகரீகம் செழித்து வளர்ந்ததால், அங்கு பஞ்சமே இல்லாத காரணத்தால் இசையையும் தமிழையும் சேர்த்தே வளர்த்துக் கொடுத்தது. பக்தியோடு சேர்ந்த இசையும் தமிழும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. காவிரிக்கரை நமக்கு கொடுத்த பல மகான்களில் ஸ்ரீ தியாகராஜர் சிறப்பானவர். இசையும் பாடலும் இணைத்து பக்தியோடு கலந்து கொடுத்த ஞான வள்ளல். இந்திய நாட்டின் பெருமைமிகு சங்கீத சாம்ராட் திருவையாறு தியாகய்யர். சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையான இவர் தெலுங்கில் கீர்த்தனைகளை இயற்றி புதிய புதிய இசைக்கோர்வையில் அள்ளித்தந்ததன் காரணமெல்லாம் அவர் ஸ்ரீராமன் மீது கொண்டிருந்த பக்தி கலந்த காதலால் தான். இசை மேடைகள் அத்தனையிலும் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த சாகாவரம் கொண்ட அந்த கீர்த்தனைகள் காலத்துக்கு சவால் விடுபவை.
திருவையாறில் வசித்த தெலுங்கு பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர் தியாகய்யர். இவரது தந்தை ராமப்ரும்மம், தாய் சீதம்மா. 1767 மே மாதம் நான்காம் தேதி இவர் திருவாரூரில் பிறந்தார். எனவே இவருக்கு அந்த ஊரின் சிவபெருமானின் பெயரான தியாகராஜர் பெயரே சூட்டப்பட்டது. குழந்தைப்பருவம் முதலே இவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் மீது பக்தி கொண்டு வளர்ந்தார். தியாகய்யர் பார்வதி என்ற பெண்ணை தனது மனையாளாகக் கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லாமல் போகவே, பார்வதியின் தங்கை கனகம்மாளை மணம் செய்துக்கொண்டார். தியாகய்யர்-கனகம்மாள் தம்பதிகளுக்கு சீதாலட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்தது. குடும்ப வாழ்வில் இணைந்து இருந்தாலும் அவர் சதாசர்வ காலமும் ராமரின் மீதே மனம் லயித்துக்கிடந்தார். அதனால் அவரது பாடல்கள் யாவும் உருக்கமாக ஜீவனோடு வெளியானது. திருவையாறு விட்டு மிக அரிதாக வெளியூர்களுக்கு சென்ற தியாகப்பிரம்மம் அங்குள்ள கடவுளர்களைப் பாடித் தொழுதார். காஞ்சிபுரம், கோவூர், திருப்பதி, லால்குடி, நாகப்பட்டினம் போன்ற தலங்களில் இருந்த கடவுளர்களைப் பற்றி 16 கீர்த்தனைகளைப் பாடியுள்ளார்.
பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் என்ற இரு இசை நாடகங்களையும் தியாகய்யர் எழுதியுள்ளார். ஸ்ரீராமனை எண்ணியே வாழ்நாளை இசையோடு கழித்த அந்த இசைப்பிரம்மத்தின் வேண்டுதலை அடுத்து ஸ்ரீராமனே அவருக்குக் காட்சியளித்து அருள் செய்தார். ராமபிரானை தரிசித்த ஐந்தாவது நாளே அந்த இசைப்பேரொளி 1847-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ராமனோடு கலந்து சித்தியடைந்தார். அவரது திருவுடல் திருவையாறு காவிரிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
காலங்கள் கடந்தது. அவரது பாடல்கள் அவரது வழிவந்த சீடர்களால் பாடப்பட்டு உலகப்புகழ்பெற்றது. 400க்கும் மேற்பட்ட அவரது கீர்த்தனைகள் கேட்டவரை மயக்கியது. பக்தி ரசம் சொட்ட சொட்ட வழிந்த அந்த பாடல்களும் இசையும் இறைவனை ஆராதிக்க பயன்பட்டது. 1925-ம் ஆண்டு ஸ்ரீதியாகய்யரின் சமாதியை கண்டறிந்து, அதை சீரமைத்து எல்லோரும் வழிபடும் தலமாக மாற்றிக்கொடுத்தவர் மைசூர் நாகரத்தினம்மாள். இவரது சமாதி இன்றும் ஸ்ரீ தியாகய்யரின் சமாதிக்கு எதிரேயே உள்ளது. இசையே இறைவன் என்று வாழ்ந்த தியாகப்பிரம்மத்தின் ஆராதனை விழாவாக ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அப்போது உலகமெங்குமுள்ள கர்னாடக இசைப்பாடகர்களும், இசைக் கலைஞர்களும் திருவையாற்றில் அவரது நினைவிடத்தில் கூடி, அவரது கீர்த்தனைகள் பலவற்றைப் பாடி அந்த மகானுக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்போது பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அன்று காலை ஸ்ரீ தியாகப்பிரம்மம் வசித்த திருவையாறு திருமஞ்சன வீதியில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து ஸ்ரீதியாகப்பிரம்மத்தின் உற்சவ சிலை வீதி ஊர்வலம் வரும். அதன்பிறகு தியாகய்யர் நினைவிடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். பின்னர் நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம் என்னும் ஐந்து வகை ராகங்களைக் கொண்ட பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்படும். இந்த விழாவில் கலந்து கொள்வது என்பது ஒவ்வொரு இசைக்கலைஞர்களின் கனவாகவே இருக்கும். எனவே உலகெங்கும் இருக்கும் அவர்கள் பல்வேறு வாத்தியங்களோடு இங்கு வந்து இசை அஞ்சலி செலுத்துவார்கள். இசையின் வழியே இறைவனை வசமாக்கிய தியாகப்பிரம்மத்தின் ஆராதனை விழா நாளை நடக்கவுள்ளது. இது இசைக்கு மட்டும் சிறப்பான நாள் இல்லை. ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கும் தான்.